பாஜக முன்னாள் இணை அமைச்சர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி சுமத்திய பாலியல் புகார் தொடர்பான அவதூறு வழக்கில் பிரியா ரமணி குற்றமற்றவர் என டெல்லி பெருநகர நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல பத்திரிகையாளராகவும், கட்டுரையாளராகவும் அறியப்பட்ட எம்.ஜே.அக்பர், பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார்.

2014ல் மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தபோது, அதில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் எம்.ஜே.அக்பர்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் உலக அளவில் வைரலான ‘மீ டூ’ (MeToo) என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் பாலியலுக்கு உள்ளானதாக புகார் பதிவிடும் விவகாரம், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த இயக்கத்தில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு அனுபவங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக பிரபல பத்திரிகையாளரான பிரியா ரமணி, எம்.ஜே.அக்பரின் கீழ் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரியா ரமணி தனது பதிவில், ‘இந்த நபரால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்வார்கள்’ எனக் கூறியிருந்தார். அதேபோல், பல பெண்கள் தாங்களும் எம்.ஜே. அக்பரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் கூறினார்கள்.

இந்நிலையில் பிரியா ரமணியின் புகார், மத்திய அமைச்சரவையிலும் சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து, தமது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஜே. அக்பர்.

அதன்பிறகு தனக்கு எதிரான பிரியா ரமணியின் குற்றச்சாட்டால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் எம்.ஜே. அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தன் மீது பிரியா ரமணி சுமத்திய குற்றச்சாட்டுகள் போலியானவை என்று அவர் தொடர்ச்சியாக மறுத்து வந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்கள், பிப்ரவரி 1 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் வழக்கில் பிரியா ரமணிக்கு எதிராக எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்காததால் டெல்லி பெருநகர நடுவர் நீதிமன்ற பத்திரிக்கையாளர் பிரியா ரமணியை குற்றமற்றவர் எனக் கூறி விடுவித்துள்ளார்.

மேலும் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே கூறுகையில், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது தன்னம்பிக்கையையும், சுயகவுரவத்தையும் ஒருவரிடம் பறிப்பதாகிவிடும். சமூக அந்தஸ்து உள்ளிட்ட காரணங்களால் பல பெண்கள் புகார் தர முன் வருவதில்லை.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள் புகாரளிக்க புதிய வழிவகை தேவை. மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்கள் குரல் கொடுப்பதற்காக அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வழக்கில் இருந்து பிரியா ரமணி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பெண் உரிமை செயல்பாட்டாளர்கள், பெண் பத்திரிகையாளர்கள் என பலரும் வரவேற்று, பெண்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நாட்டிலேயே முதல் ‘பாலின பூங்கா’ திட்டம்: கேரள முதல்வர் அதிரடி