அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று (அக்டோபர் 27) தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாரு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15% எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020 – 21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்துகிறது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் முதல்கட்டக் கலந்தாய்வுக்கு அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2ந் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஜிஎச்எஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2020 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை (அக்டோபர் 28) வரை தள்ளி வைக்கப்படுகிறது.

இதுகுறித்த புதிய தகவல்கள் www.mcc.nic.in என்ற இணையதளம் மூலம் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் தகவல்களுக்கு மாணவர்கள் எம்சிசி இணையதளத்தைக் காணலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான போதும் பல்வேறு குளறுபடிகள் இருந்ததும், இணையதளம் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவப் படிப்பில் தொடர்ந்து இதுபோன்று குளறுபடிகள் மாணவர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மருத்துவக் கலந்தாய்வுக் குழு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில், ”இந்தியா முழுவதும் மத்திய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக நாடு முழுவதும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு சார்பில் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கே சென்று தங்களின் மாற்றுத்திறனை ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிச் சான்றிதழைப் பெறுவோர், மருத்துவப் படிப்புகளில் 5% இட ஒதுக்கீட்டைப் (PwD reservation) பெற முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உயர்சாதி EWS 10% விரைந்து செயல்படுத்தியது போல் OBC இடஒதுக்கீட்டினை வழங்குக; ஸ்டாலின்