தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இறந்து கிடந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்தவர் சிவநேசன். இவர் திருக்கோவிலூர் தெற்கு தெருவில் உள்ள பாஸ்கர் என்பவர் நடத்திவரும் ஆவின் பாலகத்தில், பால் பாக்கெட் ஒன்றை வாங்கினார். பின்னர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்தபோது, அந்த பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் தவளை கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவநேசன், ஆவின் பாலக முகவர் பாஸ்கரிடம் முறையிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரனிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து புகாரளித்த சிவநேசனின் வீட்டிற்கு நேரில் சென்று பால் பாக்கெட்டில் தவளை இருந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார் விற்பனைப் பிரிவு மண்டல பிரிவு மேலாளர் ஐயங்கரன். தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய ஆவின் பாலை இவ்வாறு அலட்சியமாக விநியோகிப்பதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருக்கக் கூடிய பால்வளத்துறை தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவின் பால் திருடி விற்கப்பட்டு, தண்ணீர் மற்றும் கலப்படங்கள் செய்து மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.

இந்நிலையில் நன்றாக பேக் செய்யப்பட்டிருந்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பால் பாக்கெட்டில் தவளை எப்படி போயிருக்கும் என்று அதிகாரிகள் பல்வேறு விதமாக யோசித்து வருகின்றனர்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு விளக்கு 21,666 ரூபாய்- RTI அதிர்ச்சி தகவல்