மருத்துவம் படிக்கும் கனவுகளோடு அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் 21வது பிறந்த நாள் இன்று.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய மோடி அரசு அறிவித்த நாள் முதல் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு சிதைந்து, பலரும் வேதனையில் ஆழ்ந்து வருகின்றனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உரிய தகுதி இருந்தபோதும், பாடத்திட்டத்தில் இல்லாத நீட் நுழைவுத் தேர்வால் தங்களால் மருத்துவராக முடியாதோ என்ற தாழ்வு மனப்பான்மையை பாஜக மோடி அரசு உருவாக்கி வருகிறது.
மேலும் நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்துக்கும் நீட் தேர்வு பாடத்திட்டத்துக்கும் பெரிய அளவிலான மாறுபாடு இருந்ததால், தமிழக ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் தமிழ் வழியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மருத்துவம் படிப்பை லட்சியமாக கொண்டிருந்த ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
அதற்கு முதல் பலியாக தனது உயிரையே நீத்தார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அரியலூர் மாவட்டத்தில் 2000 ஆம் மார்ச் 5 ஆம் தேதி பிறந்த அனிதா, மருத்துவம் படித்து சேவை செய்வதே இலக்கு என்ற கனவுகளோடு அரசுப் பள்ளியில் பயின்றவர்.
தனது தந்தை சுமைதூக்கும் கூலி தொழிலாளி என்ற போதிலும், கல்வியில் சிறந்து விளங்கிய அனிதா, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அதிக மதிப்பெண் பெற்ற நிலையில், மருத்துவம் படிக்கும் கனவுகளும் மேலோங்கியது.
[su_image_carousel source=”media: 22629,22630″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இந்நிலையில் தான், மருத்துவப் படிப்பிற்க்காக இதுவரை தான் படித்து எடுத்த மதிப்பெண்ணுக்கு எந்த வித பயனும் இல்லை என்று கனவு கலைந்த வேதனையில், செப்டம்பர் 1 ஆம் தேதி மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தன.
மாணவி அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து, நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு பிரதீபா, ஸ்ருதி, ரிதுஸ்ரீ என 10க்கும் மேற்பட்ட அப்பாவி மாணவர்கள் நீட் தேர்வால் தங்கள் உயிர்களை பலி கொடுத்துள்ளனர்.
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து முழுவதுமாக விலக்களிக்க வேண்டும் என கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்திய அரியலூர் மாணவி அனிதாவின் 21வது பிறந்தநாள் இன்று.
நீட் தேர்வாலும், அதை திணித்தவர்களாலும் அரசியல் கொலை செய்யப்பட்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நீட் இல்லா தமிழகம் அமைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.
100வது நாளை எட்டிய ‘டெல்லி சலோ’ போராட்டம்; இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலி