7.63 x 39 மி.மீ தாக்குதல் திறன் கொண்ட 5 லட்சம் AK-203 ரக துப்பாக்கிகளை கொள்முதல் செய்வதற்காக இந்தியா- ரஷ்யா இடையே இன்று (6.12.2021) ஒப்பந்தம் கையெழுத்தானது.

டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதுதவிர, கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி கலாஷ்னிகோவ் சீரிஸ் சிறிய ஆயுதங்களின் உற்பத்தி தொடர்பாக இந்தியா ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் சிறு திருத்தம் செய்யப்பட்டு, அந்த புதிய ஒப்பந்தமும் இன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரஷ்யாவின் பிரபல AK-203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஒப்புதல் உறுதியாகியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 5 லட்சம் AK-203 ரக துப்பாக்கிகளை இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த AK-203 ரக துப்பாக்கிகள் 7.63 x 39 மி.மீ தாக்குதல் திறன் கொண்டது. இவை நிமிடத்திற்கு 600 தோட்டாக்களை உழிழும் சக்தி வாய்ந்தவை. குறைவான எடை கொண்ட இந்த வகை துப்பாக்கிகள் துல்லியமாகவும் ஆழமாக பாயும் திறன் கொண்டவையாகவும் உள்ளன. காலநிலை மாற்றத்திலும் கச்சிதமாக இலக்கை நோக்கி பாயும் எனவும் எளிதில் பராமரிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான செலவீனம் கிட்டத்தட்ட 5100 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த AK-203 அசால்ட் ரைபிள் வகை துப்பாக்கிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இன்று (6.12.2021) ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு மற்றும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த கையெழுத்தில், இந்திய ராணுவ கொள்முதல் தவிர பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அமேதி பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை தொடரவும் இந்தியா மற்றும் ரஷ்யா முடிவு செய்துள்ளன. இதுகுறித்தும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு மற்றும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே ரஷ்ய நாட்டில் இருந்து வான்வழி பாதுகாப்புக்காக S-400 ஏவுகணை கருவிகள் தொகுப்பு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த S-400, தொகுப்பாக நிறுவப்படும் ஏவுகணைகள் மூலம், எதிரி நாடுகள் விமானத் தாக்குதல் அல்லது ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் அதை விரைவாக கண்டறிந்து முறியடிக்கும் பதில் தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது. மேலும் ரஷ்ய நாட்டில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்யவது தொடர்பான ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ரஷ்யாவுடனான நல்லுறவில் பாதுகாப்பு ரீதியான இந்திய உறவு காலத்தை வென்றது. இதுவே இரு நாட்டின் நல்லுறவிம் மிகப் பெரிய தூண் என்றாலும் அது மிகையாகாது.

கடந்த 20 ஆண்டுகளாக ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பின் நிமித்தமான இந்திய ரஷ்ய உள் நாட்டு ஆணையம் (India Russina Inter Governmental Commission on Militray Technical Coperation IRIGC- MTC) வலுவாக இருக்கிறது. இந்தியா, ரஷ்யா ராஜாங்க ரீதியான உறவு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. அதனால் நமது கூட்டணி இந்திய ரஷ்ய பிராந்தியத்தில் அமைதியையும் வளத்தையும் உறுதி செய்யும்” என்றார்.

இந்நிலையில் இந்தியா – ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

இந்த சந்திப்பில் ராணுவம், தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துறைகளில் இருதரப்பு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், ஆசிய பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்கவுள்ளனர். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு உச்சி மாநாடு நடக்காத நிலையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறுவது குறிப்பிப்பிடத்தக்கது.