வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்று பதாகைகளை ஏந்திக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து தற்கொலை மற்றும் டெல்லியில் நிலவும் கடும் குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போராட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை மரணித்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு 11 முறை பேச்சு வார்த்தை நடத்தியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளதால் முடிவு எட்டப்படப்படாமல் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

[su_image_carousel source=”media: 22561,22562″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இதனைத்தொடர்ந்து, போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது, ஒருபிரிவினர் காவல்துறையின் தடுப்பை மீறி டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வன்முறை மற்றும் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டதற்கு, பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்து மற்றும் ஆர்வலர் லகா சிதானா மட்டுமே காரணம் என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்தும் கைது செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து ரயில் மறியல், சாலை மறியல் என பல்வேறு வகையான போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள விவசாயிகள், பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு விவசாய குழுவினரை அனுப்பி, பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாகவும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிற்கும் தொகுதிகளில் எதிர் அணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் 100வது நாள் போராட்டத்தையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதியாக போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை செய்வது வேதனை- மலாலா யூசுப்சாய்