நில அளவை, உட்பிரிவு செய்தல், எல்லை வரைபட பிரதிகள் பெறுவது தொடர்பான நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசின் வருவாய்துறை வெளியிட்டுள்ளது. அதில் நில அளவை, உட்பிரிவு செய்தல், எல்லை வரைபட பிரதிகள் பெறுவது தொடர்பான, 14 வகை கட்டணங்களை உயர்த்தி, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பதிவுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள அரசாணையில், FMB எனப்படும் புல அளவீட்டு புத்தக பிரதியில், ஒரு பக்கத்துக்கு A4 பிரதி 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆகவும், A3 பிரதி 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புல எல்லைகளை சுட்டிக்காட்டும் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோணமானி மூலம் பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட 30 ரூபாயிலிருந்து 300 ரூபாய் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில், ஒரு பக்க எல்லைக்கான கட்டணம், 50 ரூபாயாக இருந்தது; 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

உட்பிரிவு, பாகப் பிரிவினைக்கு முன், நில அளவை செய்வதற்கான புதிய கட்டணம், புன்செய் நிலத்திற்கு 30 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் நன்செய் நிலத்திற்கு 50 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு புன்செய் நிலத்திற்கு 60 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், நன்செய் நிலத்திற்கு 60 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம், கிராமப்புறம், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் முறையே, 400, 500, 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 85 ரூபாயாக உள்ள கிராம வரைபட பிரதி கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட வரைபடத்திற்கான கட்டணம் 189 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கான எல்லைக்கோடு வரைபட கட்டணம் 51 லிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வட்ட வரைபடத்திற்கான (வண்ணம்) கட்டணம் 357 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நில அளவை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையை ஏற்று 40 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: வேதா இல்லத்தை சட்ட ரீதியில் மீட்டெடுப்பேன்; இது முடிவு அல்ல, ஆரம்பம்- ஜெ.தீபா சூளுரை