5 முக்கிய பரிந்துரைகளில் ஒன்றான ஊடக விளம்பரங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவரின் பரிந்துரையை திரும்பப்பெற செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பணிகள் மட்டும் நடைபெறுகிறது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி நிவாரணம் வேண்டப்பட்டு, சாதாரண குடிமக்கள் உட்பட தொழில் முனைவோர், திரைபிரபலங்கள் என ஏராளமானோர் நிதியளித்து வருகின்றனர்.

இதனிடையே, இரண்டு நிதியாண்டுகளுக்கு எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கிடைக்கும் மொத்தத் தொகையான ரூ.7,900 கோடி ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கான நிதியில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏப்ரல் 1லிருந்து, ஓரண்டிற்கு எம்.பி.க்களுக்கான நிதிசார்ந்த பல்வேறு சலுகைகள், ஒய்வூதியம் ஆகியவற்றிலும் 30 சதவீதத்தை குறைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்திருந்தார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 5 முக்கிய பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கரோனா பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் இருந்தால் கூறும்படி கேட்டிருந்தீர்கள். அதனடிப்படையில், இந்த ஆலோசனைகளை வழங்குகிறேன். “நாடாளுமன்றத்தை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு ரத்து செய்து, அதனை கொரோனா நிவாரண பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும். இப்போதுள்ள நாடாளுமன்றத்திலேயே சுமுகமாக பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால் அதனை புதுப்பிப்பதற்கு அவசரம் ஒன்றும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக அடிப்படை வசதிகளைக் கொண்ட புதிய மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்காக கட்டலாம். மருத்துவ பணியாளர் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடியை பயன்படுத்தலாம்.

ஊடக விளம்பரங்களுக்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,250 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த விளம்பரங்களை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இந்த விளம்பரங்களை தடை செய்வதன் மூலம் கனிசமான தொகையை திரட்டலாம்.

மத்திய அரசு மொத்த செலவில் 30 சதவீதம் வரை (ரூ. 2.50 லட்சம் கோடி) குறைத்துக் கொண்டு அதனை வெளிமாநில தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் செய்வோரின் நலனுக்கு பயன்படுத்தலாம்.

PM cares fund-க்கு அனுப்பப்படும் கொரோனா நிவாரண நிதி அனைத்தும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றி, செயல்திறன், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.3,800 கோடி வரை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு பயண செலவு மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 393 கோடியாக உள்ள நிலையில், முடிந்தவரை வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பரிந்துரைகளுடன் பிரதமருக்கு சோனியா கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், ஊடக விளம்பரங்களை 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்ததை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திரும்ப பெற வேண்டும் என செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொற்றுநோய் குறித்த செய்திகளைப் கொண்டு செல்ல, ஊடக ஊழியர்கள் தங்கள் உயிருக்கு அஞ்சாமல் தேசிய கடமையைச் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், காங்கிரஸ் தலைவரின் இந்த அறிக்கை மனச்சோர்வை ஏற்படுத்துவதாக செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத் தலைவர் ரஜத் ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுள்ளது.