ஆர்எஸ்எஸ் மாணவரணி தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக 62 வயது மூதாட்டி அளித்த புகாரில், டாக்டர் சுப்பையா சண்முகம் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைவராகப் பதவியில் உள்ள சுப்பையா சண்முகம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துறைத் தலைவராகவும் பணி புரிந்து வருகிறார். ஆதம்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இவர் வசித்து வருகிறார்.

அதே குடியிருப்பில் வசித்து வரு 62 வயதான பெண்ணுக்கும், பாஜக ஆர்எஸ்எஸ் மாணவரணி தலைவர் சுப்பையா சண்முகத்துக்கும் இடையில் நீண்ட நாட்களாக வாகனத்தை நிறுத்துவதில் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அப்பெண் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் ஏபிவிபி மாணவரணி தலைவர் சுப்பையா சண்முகம், தன்னை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வருவதாகவும், தன் வீட்டு வாசலில் சுப்பையா சிறுநீர் கழித்துவிட்டதாகவும், ஆபரேஷனுக்கு பயன்படுத்திய மாஸ்க் உட்பட பல குப்பைகளை வீட்டு வாசப்படியில் வீசிவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் இது சம்பந்தமான சிசிடிவி பதிவுகளையும் இணைத்து புகார் அளித்துள்ளார்.

ஆனால், புகார் அளித்தும் சுப்பையா மீது போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட பெண்ணும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களிலும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் ஏபிவிபி மாணவரணி தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க: பாஜக அமைச்சரின் 900 கோடி ஊழல்; போலீஸார் விசாரிக்க உத்தரவு