அமைச்சர் விஜயாபாஸ்கர் மக்களுக்கு வழங்கிய இலவச அரிசி மூட்டையில் ‘நாளை முதல்வர்’ என்ற வாக்கியம் கொண்ட புகைப்படம் வைரலானதையடுத்து அமமுக கட்சியின் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொடங்கியதிலிருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் மோதல் என்ற செய்திகள் வலம்வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தன் சொந்த தொகுதியான புதுக்கோட்டையில் நிவாரண பொருட்களை வழங்கினார்.
அவர் வழங்கிய அரிசி மூட்டையில், விஜயபாஸ்கரின் பெயருக்கு கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சர் என்று குறிப்பிட்டு, புகைப்படத்துக்கு மேலே நாளைய முதல்வர் என்று எழுதப்பட்டிருந்த புகைப்படம் சமூக ஊடங்களில் வைரலாகியுள்ளது.
இது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்தது. எனினும் இதனை உடனடியாக விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மறுத்தனர். இதையடுத்து, விஜயபாஸ்கரின் தரப்பிலிருந்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
மேலும் வாசிக்க: ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொன்ற கயவர்களுக்கு கடும் தண்டனை தேவை: ஸ்டாலின் காட்டம்
அதில் “யாரோ நாளைய முதல்வர் என்ற வாசகங்களை சேர்த்து திரித்து வாட்சப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார், விழுப்புரத்தைச் சேர்ந்த அமமுக கட்சியின் ஐடி பிரிவு செயலாளர் முத்துக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.
ஆனால், இந்த கைது நடவடிக்கைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லாத புகாரின் அடிப்படையில் எத்தனையோ ஆயிரம் பேர் பகிர்ந்த ஒரு பதிவுக்காக முத்துக்குமாரைகைது செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும்,
ஆணவத்தின் உச்சத்தில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களின் அரசியல் உள்நோக்கம் கொண்ட தூண்டுதலுக்கு இணங்கி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போலீசாரின் கண்ணியத்தைக் குலைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.