சென்னைக்கு மே 31ம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவைகள் வழங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் 5வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 3.67% என்ற அளவில் தான் உள்ளது. குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 27% ஆக இருக்கிறது. இந்திய அளவில் இது நல்ல விகிதம் ஆகும்.

சென்னையில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மே 31-ஆம் தேதி வரை ரயில் சேவை மற்றும் விமான சேவைகளையும் துவங்க வேண்டாம்.

மேலும் வாசிக்க: ஸ்டிக்கருக்கு அதிகாலை கைதா.. டிடிவி தினகரன் ஆவேசம்

மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும். நெல் கொள்முதலுக்காக, மானியத்தொகை ரூ.1,321 கோடியை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் வழங்க, கூடுதல் தானியம் வழங்க வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான செலவையும் ஈடுகட்ட நிதி ஒதுக்க வேண்டும்.

மின்துறைக்கு ஈடுபட்டுள்ள சுமையை குறைக்க உடனடியாக நிவாரணத் தொகுப்பை அறிவிக்க வேண்டும். நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் 50 சதவீதத்தை விடுவிக்க வேண்டும். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும்.

நோய் தடுப்புக்கு உடனடியாக 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் உடனே வழங்க வேண்டும்” கோரிக்கை விடுத்துள்ளார்.