நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி  செய்ததாக ஓய்வு பெற்ற டிஜிபி உள்பட இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இது குறித்து போலீஸ் தரப்பில் செய்தி குறிப்பில் : 
 
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, சென்னை காவல்துறையில் அண்மையில் ஒரு புகார் அளித்தார்
 
அதில், கடந்த ‘2015-ம் ஆண்டு அன்புவேல் ராஜன் தயாரிப்பில் ’வீரதீர சூரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன்.
 
அதன் இணை தயாரிப்பாளராக தமிழக காவல்துறையில் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா இருந்தார். அந்த திரைப்படத்தில் ரமேஷ் குடவாலாவின் மகன் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்தார்
 
இந்தத் திரைப்படத்துக்கு எனக்கு சம்பளமாக ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டது.
 
இந்நிலையில் திடீரென படத் தயாரிப்பு நிறுவனப் பெயரை மாற்றி படத்தின் பெயரையும் மாற்றி ஷூட்டிங் நடந்தது.
 
இதில் எனக்கு வரவேண்டிய சம்பளம் வரவில்லை. இந்நிலையில் சென்னையில் இடம் வாங்க நான் விருப்பப்பட்டதை அறிந்த தயாரிப்பாளார் அன்புவேல் ராஜன், இணை தயாரிப்பாளார் ரமேஷ் குடவாலா ஆகியோர் சிறுசேரியில் ஒரு இடத்தைக் காட்டினார்.
 
அந்த இடம் எனக்கு பிடித்திருந்ததால்,அதை நான் வாங்க முடிவு செய்தேன். இதனால் அவர்கள்  தயாரித்த திரைப்படத்தில் எனக்கு வழங்கப்படாமல் இருந்த சம்பளத்தை முன் பணமாக கழித்தனர்
 
பின்னர் சிறுசேரியில் உள்ள இடத்தை வாங்குவதற்கு அன்புவேல்ராஜனிடம் பல தவணையாக ரூ.3.15 கோடி வரை கொடுத்தேன். அதன் பிறகு விசாரித்ததில் அந்த இடத்திற்கு சரியான பாதை இல்லை.
 
அன்புவேல் ராஜனிடம் சரியான ஆவணம் இல்லை என்பதால் பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அதன்படி ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து மீதமுள்ள தொகை ரூ. 2 கோடி 69 லட்சத்து 92 ஆயிரத்து 500 கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்
 
இது குறித்துக் கேட்டபோது இருவரும் என்னை மிரட்டினர் எனவே என்னிடம் மோசடி செய்த ரமேஷ் குடவாலா,அன்புவேல் ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்
 
ஆனால் இந்தப் புகாரின் அடிப்படையில் போலிசார் எந்த  நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இதையடுத்து சூரி, தன்னை மோசடி செய்து ஏமாற்றிய அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்து,நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
 
இதன் அடிப்படையில் அடையாறு போலீஸார் அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா மீது நம்பிக்கை மோசடி,போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்
 
ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி விவகாரம் என்பதால் இந்த வழக்கின் விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது.
 
மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குத் தொடர்பான  விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர்  சூரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
 
இதற்கிடையில் நடிகர் சூரியின் புகாருக்கு, ரமேஷ் குடவாலாவின் மகனும், நடிகருமான விஷ்ணு விஷால் சுட்டுரையில் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
 
அதில், என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது.
 
சிலர் உள்ளோக்கத்துடன் செயல்படுவது கண் கூடாகத் தெரிகிறது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
 
இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம் என குறிப்பிட்டுள்ளார் .
[su_spacer]