புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். 6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது.
 
ஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் ஆளுநர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, ஆளுநர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார்.
 
நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை ஆளுநர் கிரண்பேடி ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
 
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று புதுச்சேரிக்கு நேரில் சென்று நாராயணசாமி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
 
பாஜகவால் நியமிக்கப்பட்ட கிரண்பேடி மாநில நலன்களை தடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் அமைச்சரவை தீர்மானங்களை செயல்படுத்தவிடாமல் கிரண்பேடி தடுப்பதாக கெஜ்ரிவால் சாடினார்.
 
துணைநிலை ஆளுநர்களால் யூனியன் பிரதேசங்களான டெல்லியும் புதுச்சேரியும் பாதிப்புக்குள்ளாகின்றன. .
 
மேலும் டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கிரண்பேடி புதுச்சேரியில் ஆட்சி நடத்த முயற்சிக்கிறார் என் கிண்டல் அடித்த போது சிரிப்பலை பரவியது
 
மத்தியில் நடக்கும் பாஜக ஆட்சியில் மாநில முதல்வர்கள் தர்ணா நடத்தும் நிலை உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.
 
கிரண்பேடியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் 6வது நாளாக முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
நேற்று திமுக தலைவர் நேரில் அதரவு தெரிவித்த நிலையில் , இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
 
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக தொடரும் நிலையில், வேறு வழி இல்லமால் பணிந்த கிரன்பேடி  இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார்.
 
கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். மக்கள் பிரச்சனை முக்கியம் என்பதால் 39 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்