ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இருப்பினும் விசாரணை முடிவடையாததால், ஆணையத்தின் விசாரணை காலம் ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வார கால அவகாசம் கேட்டுள்ளது. இதற்கிடையே ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் இறுதி அறிக்கையை ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்ய இருப்பதாக ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பக்க அறிக்கையை அளித்துள்ளது. அதில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பாக நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது, அதற்கு சிறப்பு மருத்துவகள் சிகிச்சை அளித்துள்ளனர்.

20.09.2016 அன்று இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் கேட்டு ஜெயலலிதா இல்லத்தில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் ஜெயலலிதா இருந்த உடல்நிலை பார்த்து, முதற்கட்ட சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருத்துகள் அளிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழுவும் சிசிக்சை அளித்து வந்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது திராட்சை, கேக், இனிப்புகளையும் சாப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், டிசம்பர் 3 ஆம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி மூச்சுவிடுவதற்கு பெரும் சிரமப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5 ஆம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்து, டிசம்பர் 5 ஆம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை. உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது” என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை அரசிடம் சமர்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.