நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடப் பணி முடியாததால் இன்னும் 6 மாதத்திற்கு தேர்தலை நடத்த வேண்டாம் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று நடிகர் எஸ்.வி. சேகர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பத்திரிகைத் துறை பெண்களை இழிவுப்படுத்தி பேசி, அதன் காரணமாக எழுந்த எதிர்ப்பால் ஓடி ஒழுந்தும், ஜாமீனுக்கு ஏங்கிய எஸ்.வி. சேகர் தனது டிவிட்டரில், “இன்று நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு)மறைந்த பல கலைஞர்களுக்கு,முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தத் தெரியவில்லை. இது அறியாமையா ⁉️. அகந்தையா ⁉️” என்று பதிவிட்டுள்ளார்.
எஸ்.வி. சேகரின் டிவிட்டிர்க்கு பதில் அளித்த நடிகர் கருணாகரன், “நம் முதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்” என்று டிவிட் அளித்துள்ளார்.
தலைமை செயலாளரான கிரிஜா வைத்தியநாதனை முதல்வர் என்று கூறியுள்ளார் கருணாகரன்.
கருணாகரனின் பதிலை பார்த்து பலர் அவரை பாராட்டியிருந்தாலும், சிலர் விமர்சித்தும் உள்ளனர்.
இதனிடையில், நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாதது கண்டனத்துக்குரியது என தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், “இன்று நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே, முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென நடிகர் சங்க உறுப்பினரும், பாஜக கலை அணிச் செயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் உதயா தெரிவித்தபோது, “கருணாநிதி, நடிகர் சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினர். தென்னிந்திய சினிமா துறையில் முக்கிய பங்காற்றியவர். அதனால் அவருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினோம். வாஜ்பாய் சிறந்த தேசியத் தலைவர், அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்க வேண்டுமென்று எந்த உறுப்பினரும் கோரிக்கை விடுக்கவில்லை. நடிகர் சங்கத்திற்கும், அரசியலுக்கும் சமந்தமில்லை. இதை அரசியலாக்க வேண்டாம்”, என்றார்.