வீடு, உதிரிப்பூக்கள், மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட படங்களின் வரிசையில், தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக உருவாகியிருக்கிறது ‘டூ லெட்’.

சிறந்த திரைப்படத்துக்கான இந்திய தேசிய விருது, இத்தாலி, இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 32 விருதுகளை வென்ற படம் டு லெட்.

நிலமற்ற ஏழை, நடுத்தரக் குடும்பங்கள், வாடகை வீடுகளில் படும் பாட்டை பல சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் டூ லெட் அதை சொன்ன விதம் தான், இத்தனை விருதுகள் வாங்க காரணம்.

செழியன் இயக்கத்தில் உருவாகிய டு லெட் படம், சென்னை பெருநகரில் வாடகை வீடுகளில் பல இன்னல்களை சந்தித்து வரும் பல ஆயிரம் குடும்பங்களில், ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை முன்மாதிரியாகக் காட்டி பதிவு செய்திருக்கிறது.

இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் இயக்குனர் செழியன் கூறுகையில், “டு லெட் ஒரு எதார்தமான படம். உதிரிப்பூக்கள், வீடு போன்ற படங்களை கொண்டாடியது போன்று, டு லெட் படத்தையும் மக்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். தற்போது தமிழ் சினிமாவில் எதார்த்தமான படைப்புகளை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் தான் டு லெட் படத்தை எடுத்துள்ளேன். ஒரு படத்தில் உண்மை இருந்தால், அது நிச்சயம் வெற்றி பெரும். உண்மையான படைப்பை மட்டுமே உலக சினிமாவாக கொண்டாட முடியும்.

டு லெட் படத்தை பொறுத்த வரை இதில் பெரிய நடிகர்களை நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் எனது உதவியாளராக பணியாற்றிய சந்தோஷையும், நாடக கலைஞரான சுஷிலாவையும் இப்படத்தில் நடிக்க வைத்தேன். படம் எதார்த்தமாக வருவதற்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.

உலக திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் டு லெட் படத்தை பாராட்டியிருக்கிறார்கள். படத்தில் உள்ள உண்மை தான் இத்தனை பாராட்டுகளுக்கும் காரணம். உலக ரசிகர்கள் கொண்டாடிய இந்த சினிமாவை என் மக்களும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்” என கூறியுள்ளார் இயக்குனர் செழியன்.