திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் மோடி அரசு ஒப்படைக்கும் விவகாரத்தில், கேரள அரசு ஒத்துழைக்காது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பதற்கு மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலை எதிர்த்து கேரள அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

பாஜக மோடி அரசின் ஆட்சியின் கொள்கைகளில் தனியார்மயக் கொள்கை அனைவராலும் பெரிதும் எதிர்க்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பல விமான நிலையங்கள் தொடர்ந்து தனியாரிடம் வழங்கப்படும் என்றும் அடுத்த 10 வருடத்தில் புதிதாக 100 விமான நிலையங்கள் நாட்டில் கட்டப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியாவிலுள்ள 12 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க இந்திய விமான நிலைய நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, திருவனந்தபுரம் உள்ளிட்ட 3 விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ஐம்பது வருடங்களுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டு, கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 19) அமைச்சரவை ஒப்புதலும் வழங்கப்பட்டது.

மோடி அரசின் இந்த முடிவை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளர். அதில், “திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் விவகாரத்தில், கேரள அரசு ஒத்துழைப்பது மிகவும் கடினம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்கும் மோடி அரசின் முடிவு- திமுக கடும் கண்டனம்