20 ஆண்டுகளாக தலைமை அர்ச்சகராக இருந்த சீனிவாசமூர்த்தி கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் திருப்பதி கோயிலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருப்பதி கோயிலை மூடி பக்தர்கள் அனுமதியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளால், பல இடங்களில் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, உலக பிரசித்த பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த ஜூன் 8ஆம் தேதி திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. முதல் 2 நாட்கள் உள்ளூர் மக்கள், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஜூன் 10ஆம் தேதியில் இருந்து பொது தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோயில்களில் சமூக இடைவெளி, தெர்மல் டெஸ்ட் உள்பட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க பக்தர்கள் மீது உலர் ஓசோன் வேதிப்பொருளை தெளித்தும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் வாசிக்க: கொரோனா பரவலை தடுக்க பக்தர்கள் மீது தெளிக்கப்படும் உலர் ஓசோன் வேதிப்பொருள்
இருப்பினும் தொடந்து கோயில் ஊழியர்களிடையே கொரோனா தொற்று பரவி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 18 அர்ச்சகர்களுக்கும், 170க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதால், கோயிலை மீண்டும் அடைக்க ஊழியர்கள் சங்கம் சார்பில் தேவஸ்தானத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், தேவஸ்தானம் அதை ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், திருப்பதி கோயிலில் முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. 20 ஆண்டுகளாக தலைமை அர்ச்சகராக இருந்த சீனிவாச மூர்த்தி (75) கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், திருப்பதி தேவஸ்தான ஊழியர்களிடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோயிலை மூடி பக்தர்கள் அனுமதியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் 4,609 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 586 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.