கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் மீது வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்ட உலர் ஓசோன் வேதிப்பொருள் தெளிக்கப்படுகிறது.

திருப்பதி திருமலைக்கு தற்போது தினமும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது பக்தர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மேற்கொண்டு பக்தர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், ஏழுமலையானை தரிசிக்க கடைபிடிக்கப்படும் வரிசைகளில் உலர் ஓசோன் வேதிப்பொருளை தெளிக்கும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

மேலும், ஏழுமலையான் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் அனைவர் மீதும் உலர் ஓசோன் தெளிக்கப்படுகிறது. உலர் ஓசோன் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவற்றை முழுமையாக அழிக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: டெண்டர் இல்லை, மோசமான தரம், ரூ.2000 கோடியில் மோடி அரசின் ‘வென்டிலேட்டர் மோசடி’..