டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோன பாதிப்பு உச்சநிலையில் உள்ளது. டெல்லியில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7900த்தை கடந்துள்ளது. தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் சிகிச்சையில் உள்ளார்கள்.

இதற்கிடையே டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அழைப்பு விடுத்தார்.

அதில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பணிகளைச் செய்ய வேண்டும் என்று முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லி அரசின் அனைத்து அமைப்புகளும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரு மடங்கு உழைத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் இனிமேல் திருமணம், விஷேசம், கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்க 50 நபர்களுக்கு மேல் அனுமதியில்லை.

மேலும் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்தியில், “கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது எனக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று நம்புகிறேன். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது காற்று மாசு மிகப்பெரிய காரணம். காற்று மாசு அதிகரித்த பிறகே, டெல்லி தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய கீதம் பாடத் தெரியாதவரைக் கல்வி அமைச்சராக்குவதா… நிதிஷ்குமார் அமைச்சரவையில் சர்ச்சை