பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களும் காணாமல் போன ஏழு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு சாலை விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டதாக கூறி காயங்களுடன் விடுத்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் இயங்கி வரும் இந்தியத் தூதரகத்தில் பணிபுரியும் இரு ஊழியர்கள் திடீரென காணவில்லை. இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அலுவலக ரீதியாக இன்று காலை வெளியில் சென்ற தூதரகப் பணியாளர்கள் இருவர் அலுவலகம் வந்து சேரவில்லை. அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சேரவில்லை. இதனையடுத்து, வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் தூதரகத்துக்கும், அதன் அதிகாரி ஹைதர் ஷாவுக்கும் நண்பகலுக்குள் சம்மன் அனுப்பியது.
இரு ஊழியர்களுமே இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வரும் சிஎஸ்ஐஎப் ஓட்டுநர்கள். இவர்கள் இருவரையும் பலமுறை தொடர்பு கொண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தகவல் வெளியானது.
இந்நிலையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட இரண்டு ஊழியர்களும் ஏழு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு சாலை விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
மேலும் வாசிக்க: சீனா, நேபாளம், பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலம் கூட தேவையில்லை; மத்திய பாஜக அமைச்சர்
இதுபற்றி, பாகிஸ்தானின் ஒரு தொலைக்காட்சி, உயர்கமிஷன் கார் ஒன்று சாலை விபத்து வழக்கில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியிட்டதையடுத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் இருவரும், விபத்து ஏற்படுத்தி தப்பிக்க முயன்றபோது பொதுமக்கள் பிடித்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுவிக்கப்பட்ட இரு ஊழியர்களும் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்பட்டார்களா என்பது குறித்து உறுதியானத் தகவல் வெளியாகாத நிலையில், அவர்களது கைதும் தாக்கப்பட்ட நிகழ்வும் ஒரு பதிலடி கொடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சில திங்களுக்கு முன்பு, இந்தியாவில் உளவு பார்த்ததற்காக இரண்டு பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்தில் வெளியேறச் சொன்னது இந்தியா. அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையா இது என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தொடங்கியுள்ளன.