கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர் பிரிவுத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸ் மறுமணம் இன்று எளிமையாக முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் நடைபெற்றது.

பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், மருமகன் முகமது ரியாசுக்கும் 43 வயதாகிறது. வீணா துவக்கத்தில் ஆரக்கிள் நிறுவனத்தில் சுமார் எட்டு வருடங்கள் பணியாற்றிய பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்பி டெக்சாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். பின்னர், 2015ம் ஆண்டு முதல், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட Exalogic என்ற ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அப்துல் காதரின் மகன் முகமது ரியாஸ். இவர் 2009-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 838 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராகவனிடம் தோற்றார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவின் ((DYFI) தேசியத் தலைவராக உள்ளார்.

இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். வீணாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். ரியாஸுக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தின்போது ரியாஸ் மற்றும் வீணா குழந்தைகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

பினராயி விஜயன் வீட்டில் வைத்து இன்று நடைபெற்ற இந்த எளிமையான திருமணத்தில் 50-க்கும் குறைவான நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த திருமணம் தொடர்பான படங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளன. இந்த படங்களில் முதல்வர் பினராயி விஜயன் அருகில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முகமது ஹாசிம் என்பவரும் நிற்கிறார். தற்போது கொரோனா பாதிப்பில் பரோலில் வெளிவந்த முகமது ஹாசிம், மணமகன் ரியாஸுக்கு மிக நெருங்கிய உறவினர் என்ற அடிப்படையில் இத்திருமணத்தில் பங்கேற்றார் என கூறப்படுகிறது.

ஆனால் இதை பாஜக கையில் எடுத்து,. தண்டனை பெற்ற கொலை குற்றவாளியை எப்படி முதல்வர் தமது அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் அனுமதிக்கலாம்.. என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா உயர்நீதிமன்றம் முகமது ஹாசிமை கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்தது; ஆனால் உச்சநீதிமன்றம் அவரை குற்றவாளி என உறுதி செய்து 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: மோடியை விமர்சித்ததாக தேசத் துரோக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி