லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் எல்லையில் சீனா தான் முதலில் அத்துமீறியது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், அதேபோல் தங்களுக்கு சொந்தமான கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததாக சீன அரசும் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பு ராணுவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்றிரவு கல்வான் பள்ளத்தாக்கு அருகே இரு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனி என்பவரும், தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டையை சேர்ந்த சந்தோஷ் பாபு என்பவரும் பலியாகியுள்ளனர்.

சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதல் குறித்து சீன ராணுவத்தின் மேற்கு கமாண்டோவின் செய்தித் தொடர்பாளர் கலோனல் ஜாங் சூயிலி குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கூறுகையில், “கால்வன் பள்ளத்தாக்கு பகுதி எப்போதுமே எங்களுக்கே சொந்தமானது.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து சீன வீரர்களை தூண்டியதாகவும், அவர்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அத்துமீறல்களை விட்டுவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா முன் வர வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு லடாக் பகுதியில் பிரச்சினையை தீர்ப்பது குறித்து ராணுவ, தூதரக பிரதிநிதிகள் வாயிலாக இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஜூன் 6ஆம் தேதியன்று மூத்த தளபதிகள் நடத்திய பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பிரச்சினையை தீர்க்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

அதேபோல, களத்திலும் தளபதிகள் பல்வேறு பேச்சுவார்த்தை கூட்டங்களை நடத்தியுள்ளனர். இந்தப் பிரச்சினை சுமூகமாக தீர்ந்துவிடும் என நாங்கள் நம்பியிருந்த நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு அருகே சீன தரப்பு அத்துமீறிவிட்டது. ஜூன் 15ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கு அருகே சீனா தன்னிச்சையாக எடுத்த முயற்சிகளால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டடு இருதரப்பிலுமே உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதை சீனா கடைப்பிடித்திருந்தால் உயிர்சேதத்தை தவிர்த்திருக்கலாம்.

எல்லை மேலாண்மையை பொறுத்தவரை இந்தியாவின் செயல்பாடுகள் அனைத்தும் இந்திய எல்லைக்கு உட்பட்டது என்பதில் தெளிவாக இருக்கிறோம். எல்லையில் அமைதியை நிலைநாட்டி, பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய தேவையை நாங்கள் உறுதியாக கடைப்பிடிக்கிறோம். அதே சமயத்தில், இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா எல்லை நடந்தது என்ன..?

1975ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையேயான மோதலில் உயிர்பலி ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்தியா-சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2017ல் சிக்கிம் மாநிலம் டோக்லாமில் இரு நாட்டு படைகளும் நேருக்கு நேர் சந்தித்து 73 நாட்கள் பதற்றம் நீடித்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தியா எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கிலும், பாங்காங் திசோ ஏரிப்பகுதியிலும் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறது. சீனா எல்லையை ஒட்டி 66 இடங்களில் சாலை வசதிகளை 2022ம் ஆண்டுக்குள் மேம்படுத்த இலக்கு நிர்ணயித்து, முதற்கட்டமாக, கல்வான் பள்ளத்தாக்கையும், தவ்லத் பெக் ஓல்டி விமானப்படை தளத்தையும் இணைக்கும் படியான சாலை சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டமைப்பு பணிகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த சீனா, தனது படைகளை இந்திய எல்லைக்குள் 2.5 கிமீ தூரத்திற்கு ஊடுருவச் செய்தது.

இதன்காரணமாக, பாங்காங் திசோ ஏரிப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே இரு முறை கைகலப்பு ஏற்பட்டு, இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பதற்றத்தை தணிக்க கடந்த 6ம் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சு வார்த்தை நடந்ததைத் தொடர்ந்து கல்வான், பேட்ரோலிங் பாயின்ட் 15, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்டு படைகளும் படிப்படியாக பின்வாங்கப்பட்டன. பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டமாக, இரு நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி மற்றும் கமாண்டிங் அதிகாரிகள் ஆலோசனை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்ததாகவும், படிப்படியாக எல்லையில் படைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்படும் என்றும் ராணுவ தளபதி நாரவனே இரு தினங்களுக்கு முன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

இதனால், லடாக் பதற்றத்தை தணிக்கும் பேச்சுவார்த்தையில் பெரும் தொய்வு ஏற்பட்டு, அங்கு நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இந்த சண்டையில் துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லை என்றும், வீரர்கள் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், லடாக் எல்லையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: திடீரென மாயமான இஸ்லாமாபாத் இந்தியத் தூதரக ஊழியர்கள் இருவர்; காயங்களுடன் மீட்பு ..