ரபேல் ஒப்பந்தத்துக்குப் பின், பிரான்சில் செயல்படும் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் பிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ்’ நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு ரூ.1123 கோடி வரி தள்ளுபடி அளித்ததாக பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம், பிரான்ஸ் நாட்டில் ‘ரிலையன்ஸ் பிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ்’ என்ற பெயரில் செயல்படுகிறது. 

இந்நிறுவனத்துக்கு சொந்தமான கேபிள் நெட்வொர்க் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பிரான்சில் உள்ளன. இந்நிறுவனம் கடந்த 2007 முதல் 2010ம் ஆண்டு வரை பிரான்ஸ் அரசுக்கு 60 மில்லியன் யூரோ வரிபாக்கி வைத்திருந்தது. 

2010-2012ம் ஆண்டு காலத்துக்கு கூடுதலாக 91 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டும் என பிரான்ஸ் கூறியது. 2015ம் ஆண்டு ஏப்ரல் வரை பிரான்ஸ் அரசுக்கு அனில் அம்பானி நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த வரிபாக்கி 151 மில்லியன் யூரோவாக (ரூ.1180 கோடி) இருந்தது. 

இந்நிலையில்தான், பிரான்ஸ் அரசிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி இறுதி செய்தார். 

இதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் இந்திய பங்குதாரர் நிறுவனமாக சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்த 6 மாதத்துக்குப்பின், பிரான்சில் ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய வரி பாக்கி வழக்கு முடிவுக்கு வந்தது. 

வெறும் 7.3 மில்லியன் (ரூ.57 கோடி) வரியை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டு 143.7 மில்லியன் யூரோ(ரூ.1123 கோடி) தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குதாரராக சேர்க்கப்பட்டதால்தான் இந்த வரிச்சலுகை ரிலையன்ஸ் பிளாக் அட்லாண்டிக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக பிரான்ஸ் பத்திரிக்கை ‘லீ மாண்டே’ கூறியுள்ளது. 

ஆனால், இதை மறுத்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ‘‘பிரான்ஸ் அரசு விதித்த வரி சட்ட விரோதமானது. எங்களுக்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. பிரான்சில் செயல்படும் மற்ற நிறுவனங்கள் சட்டரீதியாக வரிப்பிரச்னை வழக்கை தீர்த்துக் கொள்வதுபோல் எங்கள் வரிப் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது’’ என்றார். 

அனில் அம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு அளித்த வரிச்சலுகை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, ‘‘அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்படுகிறார். பிரான்சில் எத்தனை நிறுவனங்கள் இவ்வாறு வரிச்சலுகை பெற்றுள்ளன? ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு கைமாறாக இந்த வரிச்சலுகை இல்லையா?

ஒரே ஒரு காவலாளி மட்டும்தான் திருடன் என தற்போது தெளிவாகியுள்ளது.  மோடியின் ஆசிர்வாதம் உள்ளவர்கள் எதையும் பெற முடியும். பிரதமர் மோடியால் இந்த வரிச்சலுகை சாத்தியமாகியுள்ளது. தொழிலதிபர் நண்பர் அனில் அம்பானிக்கு, பிரதமர் மோடி உதவுவது அம்பலமாகியுள்ளது’’ என்றார். 

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஒரு தொழிலதிபர் நண்பர், ராணுவ ஒப்பந்தம் மற்றும் பிரான்ஸ் அரசின் வரிச் சலுகை பெறுவதற்காக, தேவைக்கும் குறைவான விமானங்களுக்கு மிக அதிக விலை கொடுக்க நமது மக்கள் பணத்தை மோடி அரசு பயன்படுத்துகிறது. 

அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க ரகசிய பாண்டு திட்டத்தை பா.ஜ அரசு அறிமுகம் செய்ததில் ஆச்சர்யம் இல்லை. ஊழலை சட்டப்படி செய்ய பா.ஜ வழிவகுத்துள்ளது. ஒட்டுமொத்த தொடர்பும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

விமானப்படையையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் மீறி சட்ட விரோதமாக ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரான்ஸ் அதிபர் கூறியது போல், ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரராக அனில் அம்பானியை சேர்க்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது பிரான்ஸ் அரசு, அனில் அம்பானிக்கு வரிச்சலுகை அளித்ததும் வெளியாகியுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த செய்தி வெளியாகியிருப்பது பா.ஜ.வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.