இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருப்பதாக மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கல்லூரிகளின் கற்றல், கற்பித்தல் வளம், ஆராய்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை என பல்வேறு காரணிகளின் கீழ் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற நாடு முழுவதும் மொத்தம் 5,805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இவற்றில், சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாவது இடத்தையும், தில்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
பல்கலைக்கழகங்களின் வரிசையில் பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி பல்கலைக்கழகம் முதலிடத்திலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மேலும் அண்ணா பல்கலைக்கழகம் 20 ஆவது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 22 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும், ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு தற்போது தான் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: பீலா ராஜேஷ் பணியிடமாற்றம் சர்ச்சையும் பின்னணியும்..