தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணனின் உறவினரான பீலா ராஜேஷ், மிக எளிதாக முக்கிய பொறுப்பான சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். கொரோனா ஆரம்பம் முதல் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், பீலா ராஜேஷ்கும் கொரோனா அப்டேட் குறித்து பேட்டி கொடுப்பதில் சர்ச்சை கிளப்பியது.

இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி கட்டுரையில், சென்னையில் மட்டும் சுமார் 236 கொரோனா மரணங்கள் அரசின் கவனத்திற்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சில ஆதாரங்களையும் அந்த கட்டுரையில் இணைத்திருந்தது அந்த நாளிதழ். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால் கொரோனா இறப்பு விகிதத்தில் வித்தியாசம் இருப்பது குறித்து நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பீலா ராஜேஷிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “முன்பு அரசு மருத்துவமனைகளில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுவதால், இறப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறைக்கு கிடைப்பதில் தாமதம் ஆகி இருக்கலாம். அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இறப்பு விஷயங்களை அந்த கமிட்டி சேகரிக்கும்” என்று தெரிவித்திருந்தார். இப்பேட்டி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது.

மேலும் வாசிக்க: பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை பிடித்த இந்தியா

ஏனெனில், கொரோனா போன்ற நோய்த் தொற்று பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய சுகாதாரத் துறைக்கு தெரியாமல் சென்னையில் மட்டும் இத்தனை மரணங்கள் நடந்துள்ளது. அது குறித்த கேள்விக்கு இனிமேல் அந்த நம்பர்களை கேட்டுப் பெறுவோம் என்று பீலா ராஜேஷ் பதிலளிக்கிறாரே, என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினார்.

சுகாதாரத்துறை செயலாளர் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து பீலா ராஜேஷ் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பீலா ராஜேஷ், தற்போது வணிக வரித்துறை மற்றும் பதிவுத் துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக உள்ள ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் வகித்து வந்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் ஜெ.ராதாகிருஷ்ணன் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 – 2019ம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதால், தற்போது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க: தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிப்பா… குழப்பத்தில் மக்கள்