புதிய தமிழ் படங்கள் திரைக்கு வந்த சில நிமிடங்களிலே, சிலசமயம் திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான இணையதளமாக விளங்குவது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.
சீமராஜா படத்தை தொடர்ந்து சாமி 2 மற்றும் ராஜா ரங்குஸ்கி திரைப்படங்கள் திரைக்கு வந்த முதல் நாளே தமிழ் ராக்கஸ் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விக்ரம், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நேற்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வெளிநாடுகளில் சாமி 2 திரைப்படம் வெளியிடப்பட்டது. திரைக்கு வந்த முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் தங்களது இணையத்தில் இந்தப் படத்தை வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து நேற்று வெளியான மற்றொரு படம் ராஜா ரங்குஸ்கி. தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிரிஷ் மற்றும் நடிகை சாந்தினி ஜெயகுமார் நடித்துள்ளனர். இது ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தையும் முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் தங்களது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சீமராஜா படம், வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக இணையத்தில் வெளியிட தடை கோரி சீமராஜா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
உத்தரவு பிறப்பித்த பின்னரும், சீமராஜா படம் வெளியான முதல் நாளே தமிழ்ராக்கர்ஸ் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் அவர்களது மற்றொரு இணையதளமான தமிழ் கன் மற்றும் மெட்ராஸ் ராக்கர்ஸ் இணையதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ், மெட்ராஸ் ராக்கர்ஸ், தமிழ் கன் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ் எம்வி, தமிழ் யோகி, திருட்டு விசிடி, இசைமினி, பிளைதமிழ், மூவிஸ்டா போன்ற இணையதளங்களும் புதுப்படங்களை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் புதுப்படங்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையில், தயாரிப்பாளர் சங்கம் முயற்சித்து வருகிறது. தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் ஆகிய இணையதள நிர்வாகிகளை பற்றி தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதனையடுத்து தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் இணையதளத்தின் நிர்வாகியை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்த விஷால் கடந்த வருடம், தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய வெப்சைட்களின் அட்மின் புகைபடங்கள் சிக்கியுள்ளதாக அறிவித்தார்.
அந்த இருவரின் புகைப்படங்களை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டு இவர்கள் இருவரும் கனடா மற்றும் சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும் அடையாளம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Trackbacks/Pingbacks