உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தை ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் லீக் செய்து ஒட்டு மொத்த ஹாலிவுட்டையும் அதிர வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

புதிய தமிழ்ப் படங்கள் தியேட்டரில் வெளியாகும் அன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் திருட்டுதனமாக இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இதை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை, நடிகர் சங்கம் மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கம் உள்பட வேறு எந்த சங்கத்தாலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க முடியவில்லை.

இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதோடு, ஒரு படத்தை எடுப்பதற்கு படாதபாடு படும் தயாரிப்பாளருக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படும் நிலை வருகிறது. தமிழ் ராக்கர்ஸ்க்கு சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.

இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் நேற்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக லீக்காகியுள்ளது. இதனால், அவென்சர்ஸ் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் வசூல் உலக அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.