ஏப்ரல் 10, 2015 தேதி அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹோலன்டை பாரிஸில் சந்தித்துப் பேசிய இந்திய பிரதமர் மோடி, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது.

இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council) ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்த விமான கொள்முதலில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் படி விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க இந்திய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை டஸால்ட் நிறுவனமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்காமல், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை டஸால்ட் நிறுவனம் தேர்ந்தெடுத்தது.

இதை குறிப்பிட்டு தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசு மற்றும் பிரான்ஸ் அரசின் தலையீடு இல்லை என்று மத்திய அரசும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரைத்ததாக முன்னாள் பிரெஞ்சு அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் பேட்டியில் தெரிவிக்க விவகாரம் சூடு பிடித்தது 

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஃபிரான்கோய்ஸ் கருத்தும், பாஜக மறுப்பும் முற்றிலும் முரணாக இருப்பது இந்த ஒப்பந்தத்தில் உள்ள சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டுகையில்,”ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி மாற்றம் செய்துள்ளார். நூறு கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை திவாலான நிலையில் உள்ள அனில் அம்பானிக்கு பிரதமர் வழங்கியிருப்பது தற்போது நமக்கு தெரியவந்துள்ளது. ஃபிரான்கோய்ஸ் ஹோலன்டுக்கு நன்றி. இதன் மூலம் இந்தியாவுக்கு பிரதமர் துரோகம் இழைத்துவிட்டார். இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்திற்கு அவர் அவமரியாதை செய்துவிட்டார்” என்றார்.

மேலும்  பீகாரை சேர்ந்த பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா, ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ரபேல் பேரம் விவகாரம் தொடர்பான பிரச்னையில் உண்மை நிலையை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அதன்மூலம் ரபேல் போர் விமானத்தின் விலை மூன்று மடங்கு கூடுதலாக வாங்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து நீங்கள் (பிரதமர் மோடி) வெளிவருவதற்கு நீண்ட நாள்களாகும் என்றார்.

மேலும்  ரபேல் விவகாரம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இன்னோரு பாஜக எம்பி சுப்ரமணி சுவாமியும் இது சிக்கலான பிரச்சனை தான் என்றும் கூறியுள்ளார்.

இதனால் பாஜக வட்டாரத்தில் பதட்டம்  எற்பட்டுள்ளதாக அக்கட்சியினர் கருத்து தெரிவித்தனர் . இதனால் பிரதமர்  மோடியின் செலவாக்கு மிகவும் சரியும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவுத்து வருகின்றனர்