தமிழகத்தில் சென்னை முதல் நாகை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
தமிழகத்தில் நவம்பர் 11 முதல் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனினும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்குப் பருவமழை இயல்வை விட குறைவாக பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), வீரகனூர் (சேலம்), தென்காசி, செங்கோட்டை (தென்காசி) தலா 4 செ.மீ., ராமேஸ்வரம், இரணியல் (கன்னியாகுமரி), வைப்பார் (தூத்துக்குடி) , காரியாபட்டி (விருதுநகர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) , கூடலூர் (தேனி) , திண்டுக்கல் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.