தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வந்தன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது.
இருப்பினும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனித்து பாடம் கற்க முடியாத சூழல் ஏற்பட்டதால், 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தது தமிழக பள்ளிக் கல்வித்துறை.
இந்நிலையில் பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 2020-2021 ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள படி, மே 3 ஆம் தேதியிலிருந்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
2020-21 ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும்,
2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10, மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது” என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலியின் கொரோனில்: மத்திய சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்கும் IMA