தமிழகம் முழுவதும் 3வது நாளாக அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பயிற்சி ஓட்டுனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன், 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க கோரி தொமுச., சிஐடியு., ஏஐடியுசி., உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, 19 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தித் தீர்வு காண வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 வருட காலமாக வழங்க வேண்டிய பஞ்சப் படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 3வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்வதால், தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு தமிழக அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் பேருந்துகள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

அந்தவகையில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, செங்கல்பட்டு அருகே விபத்தில் சிக்கியது. இதேபோல், திருப்பூரில் இருந்து செங்கல்பட்டு வந்த அரசு பேருந்து ஒன்றும் சாலையில் தடுப்புச் சுவர் மீத மோதி விபத்துக்குள்ளானது. உளுந்தூர்பேட்டையில் பயிற்சி ஓட்டுநர் ஒட்டிச்சென்ற பேருந்து விபத்தில் சிக்கியதால் பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மேலும் அரசுப் பேருந்துகள் இயங்காததால், தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவ- மாணவிகள் பேருந்துகளின் கூரை மீது அமர்ந்தபடியும் படியில் தொங்கியவாறும் ஆபத்தான நிலையில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவங்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம் .மூன்றாம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பஸ் ஊழியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு துணை ஆணையர் லட்சுமிகாந்தன் 9 தொழிற்சங்கங்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

பிப்ரவரி 25 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற நிறுத்தம் அறிவிப்பு