ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

14வது ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். இதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து கழகங்களுடன் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதற்காக வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தொமுச., சிஐடியு., ஏஐடியுசி., ஐஎன்டியுசி., எச்எம்எஸ்., இந்து மஸ்தூர் சபா உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சமாக ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைக்கவில்லை,

அதுமட்டுமின்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணம் நிலுவையில் இருப்பதாகவும் போனஸ் தொகை குறைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாக அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்கள் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நீடித்தால் தினசரி அலுவலகம் செல்பவர்களும் வெளியூர் செல்பவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்பதால்,

போக்குவரத்து ஊழியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுச்சூழல் அனுமதி பெற லஞ்சம் கொடுத்த வழக்கு; வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை