தமிழகத்தில் கொரோனா 2வது அலை உச்சமடைந்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் 10,669 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. நாட்டின் கொரோனா பாதிப்பில், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கி உள்ளது. தற்போது பரவி வரும் கொரோனாவானது எந்தவித அறிகுறியும் இன்றி வேகமாக தாக்குவதால் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் 16 ஆம் தேதி வரை 15,98,216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 17,670 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,19,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சென்னையில் 4,38,391 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். நேற்று மட்டும் 60 பேர் உயிரிழந்ததையடுத்து, சென்னையில் மொத்த உயிரிழப்பு 5,764 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 3,85,297 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் தற்போது பரவி வரும் 2வது அலை கொரோனா தொற்றானது குழந்தைகளையும் மிரட்டி வருகிறது. கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,264 சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 10,669 ஆக உயர்ந்துள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பானது, குடும்ப உறுப்பினர்களிடம் எளிதாக பரவி விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் பொதுமக்கள், பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிப்பது காலத்தின் கட்டாயமாகிவிட்து,
தேவைப்படின் வீட்டிலும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் ‘ஆவி பிடித்தல்’ நிகழ்ச்சி நடத்தக் கூடாது: தமிழக சுகாதாரத்துறை