கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்களுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 20 பேருடன் இந்த கும்பல் இயங்கி வந்ததாகவும், பல ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தெரியவந்தது.

அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 20 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த 20 பேரில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து திரையுலக பிரபலங்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் தனது பதிவில், பொள்ளாச்சி சம்பவம் கதி கலங்கச் செய்தது! இவ்வன்முறை வருடம் ஒரு முறை வந்தது போய், மாதம்இருமுறையும், வாரம் ஒரு முறையுமாய் வருவது, நீதிமன்றத்தின் கடுமையாக்கப்பட்ட தண்டனைகளால் மட்டுமே மட்டு படுத்தப்படும்! எனக் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் எந்தவிதமான அரசியல் தலையீடுமின்றி இளம்பெண்களை சீரழித்த அனைவருக்கும் சட்டப்படி தண்டனை கிடைக்கவேண்டும்.. (இந்த விசயத்தில் நாம் அரேபிய சட்டத்தை பின்பற்றலாம்) மாறாக எது நடந்தாலும் எதிர்த்துப்போராட அனைத்து பெற்றோர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சேரன் பதிவு செய்துள்ளார்.

பொள்ளாச்சி கொடூரன்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டித்துள்ளார்.

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கோபமாக வெளியிட்ட வீடியோவில், “இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த 4 பேரை கொலை செய்வதற்கு வெறும் 5 நிமிஷம் மட்டுமே போதும். மேலும், அவர்களை தூக்கில் ஏற்ற வேண்டும். அப்போது தான் இது போன்ற வெறி பிடித்தவர்கள் இனிமேல் பெண்களை தொடுவதற்கு கூட பயப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோ உடனடியாக டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் . பாடகரும், நடிகருமான பா.விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அரபு நாடுகளைப் போன்று காமுகர்களை பொள்ளாச்சி மண்ணிலே வைத்து தூக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பல பதிவுகள் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “உன்னை நம்பித்தானே வந்தேன்” என்றும், “அடிக்காதிங்க, லெக்கிங்க்ஸை கழட்டுர்றேன்” என்று அந்தப் பெண் அழும் போது ஈரக்குலையெல்லாம் நடுங்குறது. கண்ணை மூடி சரமாரியாக வாள் வீசி கழுத்தறுத்து போடுமளவான கோவம் அந்தப்பொறுக்கிகள் மேல் உற்பத்தியாகிறது. பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்வி கேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்….நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.

ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கபட போகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும்.

இதேபோன்று, நடிகர்கள் சத்யராஜ், சிபி சத்யராஜ், சித்தார்த், சசிகுமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.