அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 3,928%, சொத்து சேர்த்துள்ள புகாரில் எஸ்.பி.வேலுமணி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2வது முறையாக லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, பாலக்காடு சாலை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி.வேலுமணி. வேலுமணியின் தந்தை மறைந்த பழனிசாமி மில் தொழிலாளியாக பணியாற்றியவர். தாயார் மயிலாத்தாள் மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்.

எஸ்.பி.வேலுமணி 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை கோவை மாநகராட்சியில் காண்டிராக்டராக பதிவு செய்து இருந்தார். 1999 ஆம் ஆண்டு அவர் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதில் அவரது சகோதரரும் பங்குதாரராக இருந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் அவர் 4 தடவை எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த 2016- 2021 அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். அதிமுக கொறடாவாகவும் உள்ளார்.

இவர் அமைச்சராக இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி மீது இன்ஸ்பெக்டர் எழிலரசி கோவை லஞ்ச ஒழிப்புத்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில், “கடந்த 27.4.2016 முதல் 15.3.2021 வரையிலான கால கட்டத்தில் மட்டும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக 3,928%, அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்ததாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், ஹேமலதா (அன்பரசன் மனைவி), சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி, கார்த்திக், விஷ்ணுவர்தன், சரவணகுமார் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ரோ மால் குட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலம் ரோடு அண்டு டைமண்டு பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்கள் என 13 பேர் மீது கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று (14.3.2022) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு இன்று (15.3.2022) காலை 6 மணி அளவில் டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் வேலுமணி வீடு, நகைக்கடை, அலுவலகம், கோவையில் அன்பரசன் வீடு , வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் உள்ளிட்ட 41 இடங்களிலும், சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், திருப்பத்தூரில் 2 இடங்கள் ,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம், கேரளாவில் ஒரு இடம் என 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை குறித்து தகவல் அறிந்தவுடன் எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பு திரண்ட அதிமுகவினர், திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் வேலுமணி வீட்டில் சோதனை நடத்துவது திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.