பாராலிம்பிக்கில் 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள இந்தியா, பதக்க பட்டியலில் 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா சார்பில் 54 வீரர்கள், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
பாராலிம்பிக் போட்டியின் 7வது நாளான இன்று (ஆகஸ்ட் 30), மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா, தங்கப்பதக்கம் வென்றார். இது டோக்கியோ பாராலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் ஆகும்.
அடுத்ததாக பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் சுமித் அன்டில் கலந்து கொண்டார். அவர் இன்றைய போட்டியில் மிக அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதுவரை பாராலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் யாரும் எறியாத தூரம் இது என்பதால், சுமித் அன்டில் பாராலிம்பிக்கில் உலக சாதனை படைத்தார். தங்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு ஹரியானா மாநில அரசு ரூ.6 கோடி பரிசுத்தொகை, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அதேபோல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F46 பிரிவு) போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளது. ஏற்கெனவே இந்தப் போட்டியில் 2 தங்கம் வென்றிருந்த இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா, 64.35 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.
மற்றொரு இந்திய வீரரான சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கம் வென்றார். 67.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்த இலங்கையின் தினேஷ் பிரியன் தங்கப்பதக்கத்தை வென்றார்.
மேலும் வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து அசத்தினார். வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் வென்ற யோகேஷ் கத்துனியாவுக்கு ஹரியானா அரசு ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளது. வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
டோக்கியோ பாராலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் பவினாபென்