துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திலும் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் உடல் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கடந்த 2ம் தேதி தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான ஆவணங்களை பெற்று கொள்வதற்காக சவுதி தூதரகத்திற்குள் சென்ற கஷோகி அதற்கு பின் வெளியேவரவில்லை.

அவரை தூதரக அதிகாரிகள் கொலை செய்து விட்டதாக துருக்கி அரசும் ஊடகங்களும் சந்தேகம் எழுப்பின. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வந்தது. சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து தூதரகத்திற்குள் கஷோகி படுகொலை செய்யப்பட்டதை சவுதி ஒப்புக் கொண்டது. மிக பெரிய தவறு நிகழ்ந்து விட்டதாகவும் மன்னிப்பு கேட்டது.

இந்த சூழலில் ஜமால் கஷோகியின் உடல் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பல துண்டுகளாக அவரது உடல் வெட்டப்பட்டதாகவும், உடல் பாகங்கள் அதிகாரியின் தோட்டத்தில் இருந்த கிணற்றில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.