ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ‘ஜேன்சன்’ தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் தொடங்கிய கொரோனா முதல் அலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
10 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இரண்டாவது அலை பல நாடுகளில் உருவான நேரத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தின.
இந்தியாவிலும் கடந்த ஜனவரி மாதம் முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்ட வேக்சின் பணிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவில் வேக்சின் பணிகளை மேற்கொள்ள இதுவரை கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தேவைக்கு ஏற்ற வகையில் வேக்சின் உற்பத்தி இல்லை. இதனால் பல இடங்களில் கொரோனா வேக்சின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் சோதனை இல்லாமல் நேரடியாக அவசரக்கால அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய மோடி அரசு அறிவித்துள்ளதால், ஜான்சன் & ஜான்சன் அவரசக்கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், ஜான்சன் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டரில், “ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 5 கொரோனா வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்திய மக்களுக்கு பயோலாஜிக்கல் இ நிறுவனத்துடன் இணைந்து கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சி.
எங்கள் வேக்சின்களை பயோலாஜிக்கல் இ நிறுவனம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும். பல்வேறு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட வேக்சின் சோதனை தரவுகளை எங்கள் விண்ணப்பத்தில் இணைத்துள்ளோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி குறித்த முக்கியத் தகவல்கள்:
ஏற்கனவே இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் – வி மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினால் போதும்.
பயாலஜிகல் – இ நிறுவனத்துடன் ஜான்சன் அண்ட் ஜான்சன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இந்தத் தடுப்பூசி தயாரித்து விநியோகம் செய்யப்படும்.
அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் நடத்திய பரிசோதனையில், மோசமான உடல்நலக் குறைவு ஏற்படாமல் பாதுகாப்பதில் 85% மேல் செயல் திறனைக் காட்டியது ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பு மருந்து.
கொரோனாவால் மிதமாக பாதிக்கப்பட்டவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் செயல்திறன் 66 சதவீதமாக இருக்கிறது.
சாதாரண சளியை உண்டாக்கும் வைரஸைக் கொண்டு ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கிறது. சளி வைரஸ் மனிதர்களை பாதிக்காத வண்ணம் தடுப்பு மருந்து உருவாக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஒரு பகுதி மரபணுவை நம் உடலுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு செல்கிறது. நம் உடல் கொரோனா வைரஸை அடையாளம் கண்டு எதிர்த்துப் போரிட, இதுவே போதுமானது என்கிறது அந்த நிறுவனம். ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதியளித்த முதல் நாடு அமெரிக்கா தான். சென்ற பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா இந்த அனுமதியை வழங்கியது.
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அரிதாக ரத்தம் உறைதல் கோளாறு உண்டானதால் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இதன் விநோயோகத்தை சென்ற ஏப்ரல் மாதம் நிறுத்தி வைத்தன. பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டது. 8.68 லட்சம் பேரில் 6 பேருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் உண்டானதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகளின் புகார்களை சிபிஐ, ஐபி அமைப்புகள் பொருட்படுத்துவதே இல்லை: தலைமை நீதிபதி ரமணா வேதனை