ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் இன்று (11.10.2021) நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் சுரான்கோட் பகுதியில், ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டத்தை அடுத்து ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1 ஜே.சி.ஓ மற்றும் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் இந்திய எல்லைகள் வழியே ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகள் சாம்ரர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரமான ஈத்கா பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தலைமை ஆசிரியர் சுபுந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுபோலவே அடுத்தடுத்த அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை காஷ்மீர் பண்டிட் மருந்தாளர் மகான் லால் பிந்த்ரூ, பள்ளி முதல்வர் சுபிந்தர் கவுர், பள்ளி ஆசிரியர் தீபக் சந்த் மற்றும் பீகாரைச் சேர்ந்த வீரேந்தர் பாஸ்வான் என கடந்த 5 நாட்களில் பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளர்.
இந்நிலையில் அனந்த்னாக் மற்றும் பந்துபோரா ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் இன்று (11.10.2021) நடத்திய அதிரடி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இம்தியாஸ் அகமது தார் எனத் தெரியவந்துள்ளது. இம்தியாஸ் அகமது தார் பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.