ஜம்மு காஷ்மீரில் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த 2 ஆசிரியர்கள் உள்பட, கடந்த 5 நாட்களில் 7 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளது அதிர்ச்சியையும் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்த பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அதன்பின் ஒன்றிய பாஜக அரசு தலைமையில் துணைநிலை ஆளுநர் தலைமையில் அரசு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (7.10.2021) காலை ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரமான ஈத்கா பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்தவர்கள் மிக குறைந்த தூரத்தில் இரண்டு ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. சுடப்பட்ட இருவருமே அந்த பகுதியின் சிறுபான்மை மக்களான சீக்கிய மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.

முன்னதாக செவ்வாயன்று 68 வயது மாக்கன் லால் பிந்த்ரூ என்ற முதியவர் சுடப்பட்டார். அவர் ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பார்க் என்ற இடத்தில் பல வருடங்களாக பிரபலமான மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. பிந்த்ரூ காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர். பிந்த்ரூ கொல்லப்பட்டதை கண்டித்து காஷ்மீர் பண்டிட் அமைப்பினர் பலர் போராட்டம் நடத்தினர்.

அடுத்ததாக புதன்கிழமையன்று சாலையோர வியாபாரி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்ரீநகரில் உள்ள லால் பசாரில், மதினா செளக் என்ற இடத்தில் விரேந்தர் பஸ்வான் என்ற அந்த வியாபாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். விரேந்தர் பஸ்வான் பிகாரை சேர்ந்தவர் ஆவார்.

கிட்டதட்ட அதே நேரத்தில் பந்திபோரா என்ற இடத்தில் முகமது ஷஃபி லோனே என்பவர் சுடப்பட்டார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மஜித் அகமது கோஜ்ரி மற்றும் முகமது ஷஃபி தர் என்ற இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 நாட்களில் பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சமீபத்திய தாக்குதலுக்கு டிஆர்எஃப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக காஷ்மீர் முதன்மை காவல்துறை அதிகாரி தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மக்களின் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி ஒன்றிய அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில் ‘”நம்முடைய காஷ்மீர் சகோதரிகள், சகோதரர்கள் கொலை செய்யப்பட்டடு வரும் சம்பவம் அதிகரித்து வருவது வலியை ஏற்படுத்துகிறது.

தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது. நாம் கடினமான இந்த நேரத்தில் அவர்களுடன் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.