திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் உள்ள நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காணாமல் போனதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் முகாந்திரமில்லை என்று கூறி காவல்துறை விசாரணைக்கு ஏற்க மறுத்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக 2017ஆம் ஆண்டு அக்டோபரில் கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆகம விதிப்படி ஆய்வு நடத்த உத்தரவிடலாம் என்றும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலைகளை பார்வையிடலாம் என்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இடையே பிரபல தொழில் அதிபர் டிவிஎஸ் குருப் தலைவர் வேனு ஶ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைக்கடத்தல் தொடர்பாக ஜாமின் கோரி மனு செய்து இருப்பது பலத்த அதிர்ச்சியை தொழில் துறையினரிடம் ஏற்படுத்தி உள்ளது.

மைலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் சிலைகடத்தல் தொடர்பாக இவர் இந்த மனுவை செய்துள்ளதாக சட்ட துறை செய்திகளை மேற்கொள் காட்டி தெர்விக்கின்றன.

மேலும் இன்னொரு கோணமாக வேணு சீனிவாசன் ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தவர் என்பதால் இந்த வழக்கில் தன்னை கைது செய்து விசாரிக்க கூடும் என்ற எண்ணத்தில் அவர் முன்ஜாமீன் கோரி உள்ளதாக தெரிகிறது.

தனது முன்ஜாமின் மனுவில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தனது குழுமத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தமிழகம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைப் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளதாகவும், முறைகேடு குற்றச்சாட்டுக்கு தன்னைக் கைது செய்வதை தவிர்க்க முன்ஜாமீன் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் பிரிவு தனது விசாரணையை துவங்கும் முன்பாக வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரின் மனு நாளை (வெள்ளி) விசாரணைக்கு வரும் என்று தெரிய வருகிறது.