இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதால், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பி உள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

அக்டோபர் 4 ஆம் தேதி கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தி குறித்து நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட 6 மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. இதனால், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மின் நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் எழுதிய கடிதத்தில், “மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகர் இருளில் மூழ்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக நிலக்கரி அமைச்சம் அளித்துள்ள விளக்கத்தில், “மின்தடை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை. பருவநிலை காரணமாக சில பகுதிகளுக்கு நிலக்கரி அனுப்புவதில் தடை ஏற்பட்டுள்ளது.

கனமழை இருந்தாலும் நிலக்கரி இந்தியா லிமிடெட், மின் துறைக்கு 225 மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்கியிருக்கிறது. நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி இந்த ஆண்டு 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்கும் அளவிற்கு நாட்டில் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில், “ஒன்றிய அரசிடம் போதுமான அளவில் மின்சாரம் உள்ளது. நாங்கள் முழு நாட்டுக்கும் மின்சாரம் வழங்கி வருகிறோம். யார் வேண்டுமானாலும், எனக்கு ஒரு கோரிக்கையை கொடுங்கள்.

நான் அவர்களுக்கு தேவையான மின்சாரம் வழங்குவேன். நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக தேவையற்ற பீதி உருவாக்கப் பட்டுள்ளது. நாட்டில் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. டெல்லி உட்பட எந்த மாநிலத்திலும் மின்தடை இருக்காது.

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் கட்டணங்களைப் பொருட்படுத்தாமல் அதன் விநியோகம் தொடரும். எந்த சூழ்நிலையிலும் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படாது. டெல்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக கவலை தெரிவித்துள்ளன.

குறிப்பாக, பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பல பகுதிகளில் சுழற்சி முறையில் மின்தடை அமல் படுத்தப்பட்டுள்ளது. விநியோகம் பாதிக்கப்படவுள்ளதாக கெயில் இந்திய நிறுவனத் அதிகாரிகள் சப்ளையர்களுக்கு அளித்த தவறான தகவலால் பீதி உருவானது.

நமது தேவைக்கு ஏற்றார் போல நிலக்கரி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை ஏற்படாது. அனைத்து மாநிலங்களுக்கும் மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுகிறது” என்று அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.