தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை அக்டோபர் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் காவல்துறை அனுமதி இல்லாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துகளை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும் அவர் பேசினார். சாட்டை துரைமுருகனின் இந்த பேச்சு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், நாகர்கோவில் காவல்துறையினர் நாங்குநேரி பகுதியில் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் மீது 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் பத்மநாபபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீனதயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாக பேசிய இளைஞரை தாக்கிய சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட துரைமுருகன், தனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக கூறி ஜாமினில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.