தமிழகத்தில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்; அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 2020 மார்ச் 25 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. அதனையடுத்து ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள், மாணவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, இன்று (ஜனவரி 12) முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19.1.2021 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.