ஓர் அபூர்வ நிகழ்வு, தென் அமெரிக்கக் கண்டத்தில் நடந்துள்ளது.

தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணியான மோனிகா வேகா என்ற 33 வயது பெண், 35-வது வாரத்தில் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றார்.

அப்போது அவரைப் பரிசோதித்த மகப்பேறு மருத்துவர், வயிற்றில் உள்ள குழந்தையின் வயிற்றுப்பகுதியில் ஏதோ அசாதாரணமாக இருந்ததைக் கண்டறிந்தார். 

கர்ப்பத்தில்  இருக்கும் சிசுவின் கல்லீரலில் கட்டி இருக்கிறது என்று மருத்துவர் முதலில் நினைத்தார். அதனை உறுதிசெய்வதற்காக அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்துபார்த்தபோது, வயிற்றில் இருந்த பெண் குழந்தையின் வயிற்றில் இன்னொரு சிசு வளர்ந்து வந்தது கண்டறியப்பட்டது.

குழந்தையின் வயிற்றில் இருந்த சிசு, மிகச் சிறியதாகவும் முழுமையாக உருவாகாமலும் இருந்தது. ஆனாலும்  கரு வளர்ந்துகொண்டே இருந்தது. அந்தக்  கருவுக்கும் ஒரு தொப்புள்கொடி உருவாகி, அது குழந்தையின் குடல்பகுதியோடு இணைந்திருந்தது. அதன் வழியாக அந்தக் கருவுக்குத் தேவையான ரத்தஓட்டம்  சென்றுகொண்டிருந்தது.

pastedGraphic.png

ஆனால் இதனால் குழந்தையின் வயிற்றில் இருந்த சிசு, குழந்தையின் வயிற்றில் உள்ள உறுப்புகளை சிதைத்துவிடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை  மூலம் பிரசவம் நடைபெற்றது. 

தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தையின் வயிற்றில் உள்ள சிசு லேப்ராஸ்கோப்பி உதவியுடன் நுண்துளை  அறுவைசிகிச்சையால் அகற்றப்பட்டது. குழந்தையின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட சிசு, 2 இன்ச் நீளம் இருந்தது.

குழந்தையின் வயிற்றில் மற்றொரு சிசு வளர்வது ஆங்கிலத்தில் ‘ஃபீட்டஸ் இன் ஃபீட்டொ’ (fetus-in-fetu) என்று கூறப்படுகிறது. இதற்கு ‘கருவுக்குள் கரு’  என்று அர்த்தம். 

ஒரே சினைமுட்டையில் இருந்து இரட்டைக் குழந்தைகளாக உருவான கருவில், ஒன்று மற்றொரு கருவின் வயிற்றில் வளர்ந்துள்ளது. 5 லட்சம்  பிறப்புகளில் ஒன்று இதுபோன்று நடக்க வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற கர்ப்பம்   குறித்த மருத்துவத் தகவல்கள், 1808-ம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. இந்தியா,  இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும்  இதுபோன்று நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

யற்கை எப்போதும் ஒரே மாதிரி  பயணிப்பதில்லை தானே. அது போல தான் இதையும் எடுத்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்