வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்ட செயற்கை இடுப்புமூட்டை இந்தியாவில் விற்பனை செய்து நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படுத்திய வழக்கில் 4,700 பேருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த செயற்கை இடுப்பு மூட்டு பொருத்தப்பட்ட இந்திய நோயாளிகளுக்கு பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் 2010ம் ஆண்டே அந்த செயற்கை இடுப்பு மூட்டுகளை அந்த நிறுவனம் திரும்பப் பெறப்பட்டது தெரியவந்தது. ஆனால் இந்திய சந்தைகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இவைகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான செய்தியும் வெளியானது.

உண்மை கண்டறியப்படுவதற்கு முன்பாக 8,600 பேருக்கு இந்த செயற்கை இடுப்பு மூட்டுகள் பொருத்தப்பட்டு விட்டன. இதில் 4,700 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், செயற்கை இடுப்பு மூட்டு பொருத்தப்பட்ட மேலும் 3,600 பேர் யார் என்று இன்னும் அடையாளம் காண முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்த முறைகேடு தொடர்பாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தி வந்தது. விசாரணை முடிவில் பாதிக்கப்பட்ட 4,700 பேருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் தற்காலிக இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை மூட்டிற்கான ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என்பதால் 2025ம் ஆண்டு வரை அவர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவை வழங்க வேண்டும் என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.