ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடமிருந்து இதுவரை ரூ.1.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிகளை மீறி வாகனங்களில் சுற்றுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு செய்து, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை மீறியதாக 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிபந்தனையுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் எண் வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும். பிறகு, வாகனங்களை பெற வரும் உரிமையாளர்கள் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புக் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை தகவல் அனுப்பப்பட்ட வாகன உரிமையாளர்கள் மட்டும் அறிவிக்கப்பட்ட தேதிகளில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாகனங்களை ஒப்படைக்கும்போது காவல்நிலைய அதிகாரிகள், வாகன உரிமையாளர்களிடம் பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைக்க ஆயிரம், இரண்டாயிரம் என பணம் வாங்குவதாக ஆய்வாளர் நாகராஜ் மீது, வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் காமினி ஐபிஎஸ்.க்கு புகார் சென்றுள்ளது.

அதனை தொடர்ந்து வேலூர் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜ், திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் காவல்நிலைய ஆய்வாளராக, இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் டி.ஐ.ஜி. காமினி. இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.