சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டுவைன் பிராவோ காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தனது நாட்டிற்கு செல்ல இருப்பதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிஎஸ்கே அணியின் டெத்பவுலர் ஸ்பெஷலிஸ்ட், ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ. கரீபியன் லீக் தொடரிலிலிருந்தே காயத்தால் அவதிப்பட்ட பிராவோவால் பல போட்டிகளில் விளையாட முடியவில்லை.
இதனைத்தொடர்ந்து 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் தொடக்கத்தில் காயத்தால் அவதிப்பட்டு வந்த பிராவோ, காயம் காரணமாகவே சிஎஸ்கே அணியின் முதல் 3 போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இதனால் லுங்கி இங்கிடி, ஹேசல்வுட் பயன்படுத்தப்பட்டாலும் அது ஒத்துவரவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து பிராவோ அணியில் இடம்பெற்று வந்தார்.
ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடைசி ஓவரை பிராவோ வீச முடியவில்லை. இதனால் கடைசி ஓவரை ஜடேஜா வீசவேண்டிய சூழலில் அதுவே டெல்லி அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
பிராவோவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சிஎஸ்கே அணிக்கு அடுத்த பெரும் பின்னடைவாகும். ஏற்கெனவே தனிப்பட்ட காரணங்களால் ரெய்னா, ஹர்பஜன் இருவரும் போட்டியிலிருந்து விலகிவிட்ட நிலையில் பிராவோவும் விலகியது அணியை முன்னோக்கி நகர்த்துவதில் சிரமத்தை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
இம்ரான் தாஹிர், மிட்ஷெல் சான்ட்னர் இருவரில் ஒருவரை அடுத்த போட்டியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. இதில் கடந்த சீசனில் பர்பிள் தொப்பி வென்ற இம்ரான் தாஹிரை இதுவரை ஒரு போட்டியில்கூட சிஎஸ்கே அணி களமிறக்காதது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் வாசிக்க: பொய்யான செய்திகளைப் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்- பி.வி. சிந்து எச்சரிக்கை