முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி மீது தனக்கு தனி விஸ்வாசம் உள்ளதாகவும், தோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் என்றும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

இத்தொடரில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் பலரும் விமர்சித்த போதும், 37 வயதான சீனியர் தோனி இடம் பிடித்தார். தவிர, தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், விஜய் சங்கரின் தேர்வும் பல்வேறு விதத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, உலகக்கோப்பை அணி மிகச்சிறந்த அணி என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில், “போட்டியின் தன்மையை ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் கணிக்க கூடியவர் தோனி. முதல் பந்தில் இருந்து 300வது பந்துவரை என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர், ஸ்டம்புக்கு பின்னால் தோனி இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.

தோனியை பலரும் விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது. நான் முதலில் அணியில் அறிமுகமான போது, ஒரு கேப்டனாக அவருக்கு வேறு சில வாய்ப்புகளும் இருந்தது. இருந்தாலும் ஒரு சில போட்டிகளை வைத்து முடிவுக்கு வராமல், மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கினார்.

அந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டேன். அதுதான் மிகவும் முக்கியமான விஷயம். தவிர, பேட்டிங் வரிசையிலும் மூன்றாவது வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கியதும் தோனி தான். நிறைய இளைஞர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். தோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விசுவாசமே எப்போதும் முக்கியத்துவம் பெறும்” என்று விராட் கோலி கூறினார்.